The Blog

முதல் மனிதனின் மொழி? (பகுதி -1)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இன்றைக்கு தொடர்ந்தும் நாம் சில எபிரெய மொழிசார்ந்த ஆழங்களை கற்றுக்கொள்ளுவோம். எபிரெய மொழி என்பது ஒரு அற்புதமான மிக பழமை வாய்ந்த ஒரு மொழியாகும், இந்த மிகப்பழைமை வாய்ந்த புராதன மொழியாகிய எபிரேய மொழி இன்றைக்கு எருசலேம் என்னும் தேசத்தின் தாய் மொழியாக இருக்கிறது. இந்த மொழியானது, பரிசுத்த வேதாகமத்தில் தாய்மொழியாக இருப்பது மிகப்பெரிய சிறப்பு. இந்த மொழியின் அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொண்டால்,எபிரேய மொழி சார்ந்து மொழிபெயர்க்கப்பட்ட ஏனைய மொழிகளின் பரிசுத்த வேதாகமத்தின் விளக்கங்களை, மிகத்தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் உலகத்திலே தமிழ் மொழிவழியில், எபிரேய மொழியில் இருந்து அடிப்படையில் சில விஷயங்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்துக்கு கிடைக்கப் பெறாததால், இந்த காலத்தில் அதை நாம் கர்த்தருடைய கிருபையினால், அவருடைய திரு சித்தத்தினால் நிறைவு செய்யலாம். ஆனால் ஒரு விஷயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நமது தாய்மொழியிலேயே பரிசுத்த வேதாகமத்தை, உலகின் மொழி பெயர்ப்புகளில் ஐந்தாவது மொழிபெயர்ப்பாக நமக்கு தந்ததை, ஆண்டவர் நம்மேல் பாராட்டிய பெரிய கிருபையை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த எபிரேய மொழியின் வார்த்தைகளை உதாரணமாக அல்லேலூயா என்ற வார்த்தை, ஆமென் என்ற வார்த்தை, சீயோன் என்ற வார்த்தை, எருசலேம் என்ற வார்த்தை, கேருபீம் சேராபீம் என்கின்ற வார்த்தைகள்,இதுபோன்ற இன்னும் ஏராளமான வார்த்தைகள் பரலோகத்தில் உள்ளவைகளுக்கும், எபிரேய மொழியில் வேதாகமத்தை எழுதிய மோசே எபிரேய மொழியிலிருந்தே எடுத்தெழுதியதை,இவ்விடம் நாம் அறிந்துக்கொள்ளமுடிகிறது.

வேதத்தில் அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு என்பது இன்னொரு அற்புதமான விஷயம்.இந்த இடத்தில் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது: இது ஒரு மதத்துக்கான மொழி அல்ல. பரிசுத்த தேவன் இந்த பேரண்டத்தை தமது வார்த்தையால் படைத்த நம்முடைய ஆண்டவர்,தாம் திருவாய் மலர்ந்தருளி, மனிதர்களோடு உறவு கொள்ள, தமது இதைய எண்ணங்களை பதிவிட, எபிரேய மொழியை தேர்வு செய்து இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி .

இதை நாம் சமய சார்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இங்கு நாம் சமயம் சார்ந்த விஷயங்களுக்குள் எதையும் உட்புகுத்தி விடக்கூடாது. எபிரேய மொழி என்பது ஒரு மதத்திற்கான மொழியல்ல, ஆண்டவர் இந்த பேரண்டத்தின் சிருஷ்டி கர்த்தர், தாம் சிருஷ்டித்த மனிதனோடு உறவு கொள்வதற்காக, அவர் பயன்படுத்திய மொழி என்பது, என்னை பொருத்த வரைக்கும் எனது ஆராய்சியில் நான் கண்டறிந்த ஒரு உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அருமையானவர்களே! என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஆண்டவருடைய திரு வார்த்தைகள் எபிரேய மொழியை தாய்மொழியாகக் கொண்டு பதிவிடப்பட்டிருக்கிறது.பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் பதிவிடப்பட்டிருக்கிறது.

இதற்கு ஏராளமான பரிசுத்த தேவதாசர்களை கடவுளாகிய தேவன் பயன்படுத்திருக்கிறார். அவர்கள் மூலமாக (இறைவனுடைய) ஆண்டவருடைய வார்த்தைகள் நமக்கு கிடைக்கப் பெற்றது. அந்த வார்த்தைகளில் பிதாவாகிய தேவனுடைய,ஆண்டவராகிய இயேசுவுடைய,பரிசுத்த ஆவியானவருடைய ஆழங்கள், இரகசியங்கள்,மறைப்பொருள்கள், ஆகியவைகளின் சத்தியங்களை ஏராளமாக கற்றுக்கொள்ளும் பெருங்கடலுக்குள் செல்ல எபிரேயம் என்ற கடற்கரைக்கு அழைக்கின்றேன்.

ஆர்வமுள்ளவர்கள் அருகில் வாரீர் ! ஆண்டவரின் அருள் பெருவீர் !! வாழ்க நீவிர் !!! நன்றி.

…… தொடர்ச்சி பாகம் 2ல்.

Leave a Comment

Your email address will not be published.